

கோட்டயம்: நாகப்பாம்பு தீண்டியதில் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவரும் பிரபல 'பாம்பு மீட்பர்' வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. என்றாலும் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மாலைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மலையாள ஊடகமான மனோரமா தளத்துக்கு பேசியுள்ள கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.பி.ஜெயக்குமார், "வாவா சுரேஷின் உடல்நிலை முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. ஒரு வாரத்திற்குகூட அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படலாம். அவரின் மூளையின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. என்றாலும், அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது. ஏனென்றால், நேற்று மாலை திடீரென அவரின் உடல்நிலை மோசமடைந்தது.
நேற்று காலை சுயநினைவு திரும்பிய அவர், சில கேள்விகளுக்கு சாதகமாக பதிலளித்தார். உணவு சாப்பிட்டதுடன் மருந்துகளும் எடுத்துக்கொண்டார். மருத்துவர்களின் பரிந்துரையின்படி கை, கால்கள் உயர்த்தி பதில் கொடுத்தார். ஆனால், அதன்பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் அவரின் உடல்நிலை மோசமடைந்தது கவலையை ஏற்படுத்தியது. இன்று காலை வரை உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்த நிலையில், சற்றுமுன்தான் அவர் உடல்நலம் தேறினார். அடுத்த இரண்டு நாட்களில் இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு மூளையை பரிசோதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்றுமுன்தினம் நாகப்பாம்பு தீண்டியபோது எடுக்கப்பட்ட மற்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முதலில் நான்கு முறை பாம்பை சாக்குப்பையில் போட முயன்றுள்ளார். ஆனால், சாக்குப்பையில் பாம்பு வெளிவர, ஐந்தாவது முறையாக முயற்சிக்கும்போது எதிர்பாராதவிதமாக வலது காலில் பாம்பு கடித்துவிடுகிறது.
இந்தக் காட்சிகள்தான் ஆரம்பத்தில் வெளியாகின. இதன்பிறகான வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் பாம்பு தீண்டியதும், காலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றுகிறார். பின்னர் அவரே முதலுதவி செய்துகொண்டு பாம்பு தீண்டிய காலில் ஒரு துணியை கட்டிக்கொள்கிறார்.
பின்னர் அருகில் இருந்த பஞ்சாயத்து தலைவரை அழைத்து 'இந்த பாம்பு ஆபத்தானது. எனவே விரைவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லுங்கள்' என்றுள்ளார். இந்தக் காட்சிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த வீடியோ பிளாக்கர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதனிடையே, வாவா சுரேஷை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற சுதீஷ் என்பவர் செல்லும் வழியில் நடந்த சம்பவங்களை ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
அதில், "முதலில் ஒரு காரில் வாவா சுரேஷை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அந்த கார் வேகமாக செல்லமுடியவில்லை. இதனை சுட்டிக்காட்டிய வாவா சுரேஷ், வேறு காரை கொண்டுவரச் சொன்னார். வேறு காரு வந்ததும் அதில் சென்றோம். அப்போது மருத்துவமனைக்கு செல்லும்வழியில் தனது மார்பில் தட்டிக்கொண்டே, 'கண்கள் இருட்டுகிறது. வீணடிக்க அதிக நேரம் இல்லை. வேகமாக செல்லுங்கள்' என்று அரைமயக்க நிலையிலும் வாவா சுரேஷ் வேதனையுடன் பேசினார்" என்று அந்த நபர் விவரித்துள்ளார்.