

புதுடெல்லி: வைரத்தின் விலை குறையும், மருந்துகளின் விலை உயரும், இது தான் மத்திய பட்ஜெட்டா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. குறிப்பாக ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் காணொலி மூலமாக பல இடங்களில் இருந்து மக்கள் இணைந்து இருந்தனர். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நீங்கள் பட்ஜெட்டைப் பார்த்தீர்களா? நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஏழைகளுக்கு அதில் என்ன உள்ளது. ஒன்றுமில்லை. வைரத்தின் விலை குறையும் என்றும் மருந்துகளின் விலை உயரும் என்றும் இன்று காலை ஒருவர் என்னிடம் கூறினார். நான் மத்திய அரசைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் எப்போது கண்களைத் திறப்பீர்கள்?
வளர்ச்சி ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துக் கணிப்புகள் எடுக்கும்போது உங்கள் கருத்தை தெரிவியுங்கள். மதம், ஜாதி பற்றி பேச வரும் அரசியல் கட்சிகளிடம் கேளுங்கள், உங்கள் வளர்ச்சிக்கு என்ன சொல்கிறார்கள்? 5 ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.