மத்திய பட்ஜெட் நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி நம்பிக்கை

மத்திய பட்ஜெட் நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது, கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை விரிவுபடுத்தும் இலக்கு கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

75-வது சுதந்திரத்தை இந்தியா கொண்டாடும் இந்த வேளையில் கோவிட் பெருந்தொற்று, அனைத்து நாடுகளுக்கும் எண்ணற்ற பிரச்னைகளை கொண்டு வந்துள்ளது. பெருந்தொற்றுக்கு பின்னர், உலகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியாவை வேறுபட்ட கோணத்தில் உலக நாடுகள் பார்க்க தொடங்கி உள்ளன.

சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்துள்ளார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பாஜக தொண்டர்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் ஏழைகளின் வாழ்வில் நலன் சேர்க்கும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெறுவதை இலக்காக வைத்துள்ளோம். கிராமங்களில் வளர்ச்சியை கொண்டு வருவோம். அனைத்து அத்தியாவசிய வசதிகளும், அங்கு கிடைக்க செய்ய வேண்டும்.

ரசாயனம் இல்லாத இயற்கை வேளாண்மைக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயனளிக்கும். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இயற்கை வேளாண்மை மூலம் சர்வதேச விவசாய சந்தையில், இந்தியா நுழைய வேண்டும்.
மத்திய பட்ஜெட், இந்தியாவை வளர்ச்சி நோக்கி அழைத்து செல்லும். ஏழைகள், நடுத்தர மக்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை விரிவுபடுத்தும் இலக்கு கொண்டதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு சென்று சேர்க்கும். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும். இந்த பட்ஜெட் நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும்.

இதன் மூலம் சுயசார்படைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். நவீன இந்தியாவிற்கு சுயசார்பு கட்டாயம் தேவை.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in