

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அனுதாபம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையை தொடங்கும்போது, “கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள மோசமான உடல்நல பாதிப்பு மற்றும் பொருளாதார விளைவு களை சுமக்க வேண்டியவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். மருத்துவ வசதிகள் பற்றாக்குறை மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கின.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி இதுவரை 4 லட்சத்து 96,242 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். 4 கோடியே 14 லட்சத்து 69,499 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், “இந்த ஆண்டு பட்ஜெட் வளர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
பொருளாதார மீட்சியானது பொது முதலீடுகள் மற்றும் மூலதனச் செலவினங்களால் பயனடைகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தித் திறன் மேம்பாடு, எரிசக்தி மாற்றம், காலநிலை தொடர்பான நடவடிக்கை ஆகியவை வளர்ச்சியின் நான்கு தூண்கள்” என்றும் கூறினார்.