Published : 02 Feb 2022 06:24 AM
Last Updated : 02 Feb 2022 06:24 AM

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு; 350 பொருட்கள் மீதான சுங்க வரி விலக்கப்பட்டது: இ-காமர்ஸ் அடிப்படையில் நகை ஏற்றுமதி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் விலை குறையும், விலை உயரும் பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருள்களின் விலை குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

வைரம், பட்டை தீட்டப்பட்ட வைரம், ஜெம்ஸ் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குடை மீதான வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டீல் ஸ்கிராப் மீதான சுங்க வரி விலக்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆபரணங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இ-காமர்ஸ் அடிப்படையிலான ஏற்றுமதி அனுமதிக்கப்படும். இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு பட்ஜெட்டில் பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் விளைவாக 350 பொருட்கள் மீதான சுங்க வரி விலக்கப்பட்டுள்ளது. இதில் சில வேளாண் பொருட்கள், ரசாயனங்கள், துணிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் மருந்து மூலக் கூறுகள் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் சுங்க வரி எளிமையாக்கப்பட்டு சில குறிப்பிட்ட பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது முக்கிய நோக்கங்களான மேம்பாடு, ஒருங்கிணைந்த மேம்பாடு, உற்பத்தி அதிகரிப்பு, எரிசக்தி மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டில் போடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளை மனதில் கொண்டு 100-வது ஆண்டில் நாடு எத்தகைய பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் போடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்கள் குறிப்பாக அணியும் வகையிலான ஸ்மார்ட் கடிகாரம், கேட்பு சாதனங்களான ஹியரிங் எய்டு மற்றும் இயர்போன் உள்ளிட்டவற்றின் விலை குறையும். எலெக்ட்ரானிக் ஸ்மார்ட் மீட்டர் விலையும் குறையும்.

மொபைல் போன்களைப் பொருத்தமட்டில் மொபைல்போன் சார்ஜர், கேமிரா லென்ஸ் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ரசாயனங்களைப் பொருத்தமட்டில் சில முக்கியமான மெத்தனால், அசிட்டிக் அமிலம் மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

குடை மீதான வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு உதிரி பாகங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை திரும்பப் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x