Published : 01 Feb 2022 02:15 PM
Last Updated : 01 Feb 2022 02:15 PM

வருவாய் ஈட்டும் மோடியோனாமிக்ஸ்... வருமானம் இழக்கும் மக்கள்... - மத்திய பட்ஜெட் 2022 மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: 2022-23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மோடியோனாமிஸில் தேசத்தின் வருமானம் அதிகரித்துள்ளது, ஆனால் 84% இந்திய மக்களின் வருமானம் குறைந்துள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 5ஜி ஏலம் நடக்கும், கார்ப்பரேட்டுகளுக்கான கூடுதல் வரி 12%ல் இருந்து 7% ஆகக் குறையும், டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; அதற்கு 30% வரி விதிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றன. பொருளாதார ஆய்வறிக்கை, ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஆகியனவற்றில் இடம்பெற்றுள்ள இந்தியப் பொருளாதார நிலவரம் பற்றிய புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கையில் 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் 84% மக்களின் வருமானம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மத்திய பட்ஜெட்டில் அரசாங்கத்தின் வருமானம் 2020ஆம் ஆண்டில் 64.9% அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டதை ஒப்பிட்டு ஒருபுறம் அரசாங்கத்துக்கு வருமானம், மறுபுறம் மக்களுக்கு வருமான இழப்பு. இது மோடியோனாமிக்ஸ் என்று கிண்டல் செய்துள்ளது.

அதேபோல் கிரிப்டோ கரன்சிக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளதையும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸின் ரன்தீப் சிங் சூரஜ்வாலா, கிரிப்டோகரன்சி சட்ட அங்கீகாரம் பெற்றுவிட்டது. கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே அதற்கு 30% வரி நிர்ணயம் செய்துவிட்டீர்கள். சரி இதற்கு யார் வழிகாட்டியாக இருப்பது? முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கு என்ன உறுதி? கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எப்படி நடைபெறும் என்று மத்திய அரசுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நதிநீர் இணைப்புப் பற்றி சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒருபுறம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைக்கு உறுதி மறுபுறம் பேராபத்தை ஏற்படுத்தும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு. மோடி அரசு அழிவுப்பாதையில் செல்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரயின் தனது ட்விட்டர் பக்கத்தில், பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களுக்கான வரி குறைப்பைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இந்த அரசாங்கத்திற்கு வைரங்கள் தான் சிறந்த நண்பர்கள். விவசாயிகள், நடுத்தர மக்கள், தினக் கூலிகள், வேலை இல்லாதோர் பற்றி பிரதமருக்குக் கவலையில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "இந்த பட்ஜெட் யாருக்காக? இந்தியாவின் பெரும்பணக்காரர்களான 10% பேரிடம் நாட்டின் சொத்தில் 75% உள்ளது ஆனால் அடித்தட்டில் உள்ள 60% மக்களிடம் 5% சொத்து கூட இல்லை. பெருந்தொற்று காலத்தில் கூட அதீத லாபம் பெற்றவர்களுக்கு ஏன் கூடுதல் வரி விதிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x