

புதுடெல்லி: கற்றல் இடைவெளியைக் குறைக்க ஒரு நாடு ஒரே தொலைக்காட்சி திட்டம், மாணவர்களுக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துதல் என கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட கல்வி சார்ந்த அறிவிப்புகள்: ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்திற்காக வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில், கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை உறுதிபடத் தெரிவிக்கும் விவரம் இடம்பெறாவிட்டாலும் கூட கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மிகப்பெரிய தடை ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
> இந்த கற்றல் இடைவெளியை நிரப்பும் வகையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒரு வகுப்பு ஒரே தொலைக்காட்சி சேனல் (One Class One TV Channel) திட்டம் விரிவுபடுத்தப்படும். இப்போதைக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 12 சேனல்கள் உள்ளன. இனி, இதற்காக 200 சேனல்கள் செயல்படும்.
> வேளாண் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டுதல் மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகள் சேர்க்கப்படும். வேளாண் பாடத்திட்டத்தை மேம்படுத்த ஏதுவாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும்.
> டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உலகத் தரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை இந்தப் பல்கலைக்கழகம் உறுதி செய்யும். சர்வதேச தரத்திலான கல்வி அதே நேரத்தில் இந்தியத் தன்மையுடன் கிடைக்கும். அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் மொழித் தடை இல்லாமல் இதில் பயன்பெறலாம். அதற்காக பல்வேறு இந்திய மொழிகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படும். இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்கும்.
வாசிக்க > மத்திய பட்ஜெட் 2022 - முக்கிய அம்சங்கள்