

பெங்களூரு: சமூக வலைதளங்கள் ஒரு சின்ன விஷயத்தை பூதாகரமாக்கி பாதிக்கப் பட்டவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் நிலையில், சில நேரங்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிசயத் தையும் நிகழ்த்தி விடுகிறது.
'பெங்களூரு அம்மா' ஒருவரின் இட்லி கடை தொடர்பான வீடியோ அண்மையில் யூடியூப்பில் வைரலானது. அதில், முதல் தளத்தில் தயாராகும் இட்லியை கயிறு மூலம் கீழே இறக்கி அந்தப் பெண்மணி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார். இந்த வீடியோவின் பின்னணியில் யூட்யூப் பதிவர், "பெங்களூரு அம்மா 30 ஆண்டுகளாக குறைந்த விலைக்கு சுவையான இட்லி, தோசை விற்கிறார். விலைவாசி உயர்ந்துவிட்ட இக்காலத்தில் கூட 5 ரூபாய்க்கு தோசையும், 2 ரூபாய்க்கு இட்லியும் விற்கிறார். அவரால் பணம் இல்லாத ஏழைகளின் வயிறு நிரம்புகிறது. இவ்வளவு கஷ்டப்படும் அம்மாவின் வாழ்க்கையும் பணத்தால் நிரம்ப வேண்டும்" என சிலாகித்தார்.
50 லட்சம் பேர்..
இந்த வீடியோவை வெளியான ஒரு சில தினங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். முன்பு ஒரு நாளைக்கு 100 இட்லி விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் ஆயிரம் இட்லி விற்பனையாவதாக வாடிக்கையாளர்கள் தங்களது அனு பவங்களை பகிர்ந்துள்ளனர்.