

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எஸ்.ஜே.பார்க் போக்குவரத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் நாராயணா. கடந்த 24-ம் தேதி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சுளா என்ற மாற்று திறனாளியின் 3 சக்கர வாகனத்துக்கு அபராதம் விதித்து வேனில் ஏற்ற முயற்சித்தார்.
அப்போது மஞ்சுளாவின் வாகன கண்ணாடி உடைந்ததால் உதவி ஆய்வாளர் நாராயணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நாராயணா தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மஞ்சுளா அவர் மீது மண்ணை அள்ளி வீசியுள்ளார். இதனால் நாரா யணா மஞ்சுளாவை பூட்ஸ் காலால் உதைத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உத்தரவின்படி நாராயணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே மஞ்சுளா தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கற் களால் தாக்கியதாக நாராயணா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.