

புதுடெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் மென்பொருளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாங்கியது குறித்து புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான பினோய் விஸ்வம், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் தொடர்பான நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவரிடம் அவர் வழங்கினார்.