பைக்கில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி காரில் வைத்திருந்த ரூ.43 லட்சம் கொள்ளை: சினிமா பாணியில் தெலங்கானாவில் சம்பவம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சித்திப் பேட்டாவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நரசய்யா, தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த அரசு ஆசிரியர் தர் ரெட்டி என்பவருக்கு ரூ. 64.24 லட்சத்திற்கு விற்க ஒப்பந்தம் நடந்தது. நேற்று காலை இரு தரப்பினரும் தனித்தனியாக காரில் சித்திப் பேட்டா பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, தர் ரெட்டி ரூ. 43.50 லட்சத்தை, நிலம் விற்கும் நரசய்யாவிற்கு கொடுத்தார். அந்த பணத்தை அவர் தனது காரின் பின் இருக்கையில் வைத்து, பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கார் ஓட்டுநர் பரசுராமிடம் கூறிவிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது பைக்கில் முகக் கவசம் அணிந்து வேகமாக வந்த இருவர், கார் கண்ணாடியை உடைத்து, பணப்பையை எடுக்க முயன்றனர்.
கார் ஓட்டுநர் பரசுராம் காரை முன்னால் ஓட்ட முயற்சி செய்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், ஓட்டுநர் பரசுராம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், அவருடைய காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் பணப் பையை எடுத்துக் கொண்டு பைக் ஆசாமிகள் தப்பித்தனர். தகவல் அறிந்த போலீஸார் 15 குழுக்கள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயமடைந்த கார் ஓட்டுநர் பரசுராம், சித்திப்பேட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவ் சித்திப்பேட்டா தொகுதிக்கு 6 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து தற்போது இவரது மருமகனும், மருத்துவத் துறை அமைச்சருமான ஹரீஷ் ராவ் இத்தொகுதியில் தொடர்ந்து 5 முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். சினிமா பாணி போன்று நடந் துள்ள இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
