Published : 01 Feb 2022 06:21 AM
Last Updated : 01 Feb 2022 06:21 AM

உ.பி.யின் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவை எதிர்த்து மத்திய அமைச்சர் போட்டி

லக்னோ: உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரி மக்களவைத் தொகுதி யின் கீழ் வரும் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், திடீர் திருப்ப மாக பாஜக சார்பில் அகிலேஷை எதிர்த்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்பி சிங் பாகெல் போட்டியிடுகிறார். கடைசி நேரத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘அகிலேஷ் யாதவை எதிர்த்து போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது மகிழ்ச்சி யளிக்கிறது. தேசியத் தையும் வளர்ச்சியையும் முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன். கர்ஹால் தொகுதி தேர்தல் உற்சாகமானதாக இருக்கும்’’ என்றார்.

அமைச்சர் எஸ்பி சிங் பாகெல் இப்போது ஆக்ரா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சியில் இருந்தவர். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவராக இருந்தார். பின்னர், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பின்னர், பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2017 தேர்தலிலும் பின்னர் 2019 மக்களவைத் தேர் தலிலும் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். கர்ஹால் தொகுதி யில் எஸ்பி சிங் பாகெலுக்கு செல்வாக்கு உள்ளது. அகிலேஷை எதிர்த்து அவரை பாஜக களம் இறக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x