Published : 03 Jun 2014 07:58 AM
Last Updated : 03 Jun 2014 07:58 AM

முல்லை பெரியாறு விஷயத்தில் எல்லாவற்றுக்கும் நாங்கள் தயார்!- உறுதி அளிக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி

சாமானிய மக்களும் எளிதாக சந்திக்கக்கூடிய அணுகுமுறைக்குச் சொந்தக்காரர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. ‘தி இந்து’-வுக்காக அவரை சந்தித்தோம்.

எம்.பி. தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலை கேரளாவில் எடுபடவில்லையே?

பொதுவாகவே பா.ஜ.க-வுக்கு கேரளாவில் முகாந்திரம் கிடையாது. இந்த முறை மோடி அலையை அவர்கள் முன் வைத்தார்கள். அந்த அலையால் தங்களுக்கான கணக்கைக்கூட அவர்களால் இங்கு தொடங்க முடியவில்லை. ஆனால், எங்களது நல்லாட்சிக்கான சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். வழங்கியிருக்கிறார்கள்.

தேசிய அளவில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க. வெற்றியால் அந்தக் கட்சியைவிட அதிகம் பலன் அடைந்தவர் மோடிதான். தோல்விகளை எப்போதுமே காங்கிரஸ் நேர்மறையாகதான் அணுகுகிறது. கடந்த 1977-ல் காங்கிரஸ் படுமோசமாக தோல்வி அடைந்தது. வடக்கில் அந்தக் கட்சிக்கு ஏழு இடங்களே கிடைத்தன. ஆனால், அன்று இந்திரா காந்தி மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார். அதற்கேற்ப செயல்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே கட்சி மீண்டு எழுந்துவிட்டது. அப்படிதான் இம்முறையும் நடக்கும்.

பிரதமரின் அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் அமைப்பது பற்றிய மத்திய அரசின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?

அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எதை ஒன்றையுமே எடுத்தவுடன் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. முதலில் அந்த அலுவலகம் வரட்டும். அதன் மூலம் மாநிலங்களுக்கு நன்மை கிடைக்குமேயானால், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான தகவல் தொடர்பு அணுகுமுறை எளிமையாக்கப்படுமேயானால், உறவு வலுப்பட வழிவகுக்குமேயானால் அதை வரவேற்போம். பொதுவாக அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் அமையும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

உண்மையில், முல்லைப் பெரியாறு விவகாரம், ஒன்றுமே இல்லாதது. நாங்கள் தமிழகத்துக்கு எப்போதுமே தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், அணையின் பாதுகாப்பு குறித்துதான் நாங்கள் அச்சப்படுகிறோம். அணை எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? சாதாரண சூழ்நிலை என்றால் சரி. ஆனால், அசாதாரணமாக ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது? நாம் சுனாமியை பார்க்கும்வரை அதன் அபாயத்தை உணரவில்லை. அது வந்த பின்புதானே உணர்ந்தோம். தவிர, அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படும் பூமியில் அச்சம் இல்லாமல் மக்கள் எப்படி வசிக்க முடியும், சொல்லுங்கள். அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) கடுமையாக பாதிக்கப்படும். அதற்காகவும் நாங்கள் கவலைப்படுகிறோம்.

அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. உங்கள் மாநிலத்தை சேர்ந்த கே.டி.தாமஸ் உள்பட பலரும் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் இப்படி சொல்வது உங்களை சராசரி அரசியல்வாதியாக அல்லவா அடையாளப்படுத்துகிறது?

அல்ல. நாங்கள் அதிகபட்சமான அளவுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் தர தயார். நாங்கள் எங்கள் மக்களின் பாதுகாப்பு குறித்தே கவலைக்கொள்கிறோம். இதில் அரசியல் எதுவும் இல்லை. அந்த அணைக்கு மிகவும் அதிக வயதாகிவிட்டது என்பதே உண்மை.

ஆனால் 100 ஆண்டுகள் ஆயுள் கொண்ட கேரளாவின் மாட்டுப்பட்டி அணை பற்றி நீங்கள் கவலைக் கொள்ளவில்லையே?

ஒரு விஷயம், முல்லைப் பெரியாறு அணைக்காக 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டிருப்பதால் அதனை அத்தனை ஆண்டுகள் பயன்படுத்த முடியுமா என்ன? ஒரு அணையின் ஸ்திரத் தன்மையைப் பொறுத்துதான் முடிவு எடுக்க வேண்டும். அப்படிதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முடிவு எடுத்தோம்.

அப்படியானால் அடுத்து என்ன செய்யவிருக்கிறீர்கள்?

நாங்கள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்களை மேற்கொள்வோம். சட்ட வல்லுநர்களின் அறிவுரைகளைப் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதே எங்களுக்கான உடனடி தீர்வு.

இப்படியே இழுத்துக்கொண்டே போனால் இந்தப் பிரச்சினைக்கு எப்போதுதான் நிரந்தரத் தீர்வு காண்பது?

வாருங்கள், அமர்ந்துப் பேசுவோம். நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து அனைத்துவிதமான வகைகளிலும் உறுதி அளிக்கிறோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித் தர தயார். புரிந்துணர்வு ஒப்பந்தமா? வாருங்கள் அதையும் போட்டுக்கொள்வோம். மத்திய அரசைக் கொண்டு முத்தரப்பு கமிட்டி அமைத்தும் தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம். இன்னும் வேறு எந்த வகையானாலும் சரி. அனைத்துக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், சமீபத்தில் கோவை சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீர் குழாயைக்கூட உங்கள் அதிகாரிகள் அடைத்துவிட்டார்களே?

தண்ணீர் பகிர்மானம் விஷயத்தில் நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்பட மாட்டோம். அதனை விசாரித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களின் குழந்தைகளின் படிப்பு தொடங்கி பாதுகாப்பு வரை சிக்கல்கள் நீடிக்கின்றனவே?

அவர்கள் கல்வி பெறுவதிலும், பட்டா உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதிலும் சில பிரச்சினைகள் இருந்தன என்பது உண்மைதான். கல்வி பெறும் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. முடிந்தவரை அனைவருக்கும் சான்றிதழ்களை எளிமையான நடைமுறையில் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினை எழும்போதெல்லாம் அங்குள்ள தமிழர்கள் அகதிகள் போல இடப் பெயர்ச்சி ஆகிறார்களே?

பயத்தின் காரணமாக அப்படி நடந்துவிடுகிறது. கடந்த முறை அப்படி நடந்தபோதும்கூட நாங்கள் உள்ளூர்வாசிகளை அழைத்து, தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம். ஆனால், எவ்வளவோ சம்பவங்களின்போதும் ஒருபோதும் இங்குள்ள தமிழர்கள் தாக்கப்படவோ அல்லது அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதோ இல்லையே. எனவே, எந்தச் சூழலிலும் அவர்கள் இடம்பெயரத் தேவை இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் கேரளாவில் நீங்கள் சாதித்தவை மற்றும் சவால்கள் என்ன?

ஆண்டுக்கு ஒருமுறை கார் பயணம் மூலம் தினமும் சுமார் 20 ஆயிரம் மக்களைச் சந்தித்து வரும் திட்டத்தை பெருமையாகக் கருதுகிறேன். அதற்காக ஐ.நா. சபை விருதும் அளித்துள்ளது.

இது மக்கள் பிரச்சினைகளை தீர்க்கிறதோ இல்லை; குறைந்தபட்சம் அவர்களின் பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்துகொள்ளவும், எங்களுக்கான இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. தவிர, மாணவர்கள் - தொழில் முனைவோர் திட்டம் வெற்றிகரமாக நடக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு விஷயங்கள் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x