காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5 ஆயிரம் கோடி செலவில் மேகேதாட்டுவில் புதிய அணை கட்டப்படும்: கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5 ஆயிரம் கோடி செலவில் மேகேதாட்டுவில் புதிய அணை கட்டப்படும்: கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டப்படும். இந்த அணையில் 60 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு, குடிநீருக்காக பயன்படுத்தப்படும் என கர்நாடக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கார்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட அம்மாநில அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் திட்டமிட்டபடி புதிய அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என அம்மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது:

பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்கபள்ளாபூர் உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 60 டிஎம்சி கொள்ளளவில் புதிய‌ அணை கட்டுவதற்கான திட்ட விவர அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த அறிக்கையை இன்னும் 15 நாட்களுக்குள் மத்திய நீர் ஆணையத்திடமும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச் சகத்திடமும் தாக்கல் செய்ய இருக்கிறோம். மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதால், மத்திய அரசு நிச்சயம் அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி அணை கட்ட அனுமதி பெற்று தருவதாக கர்நாடக மத்திய அமைச்சர்களும் உறுதி அளித்துள்ளனர்.

வறட்சிக் காலங்களில் இந்த அணையில் இருந்து தமிழகத் துக்கும் நீர் திறந்துவிட முடியும். திட்டத்தை நிறைவேற்ற முதல் கட்டமாக மேகேதாட்டுவில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த முடிவு செய்துள்ளோம். மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என வல்லுநர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள‌ கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49 டிஎம்சி வரை நீர் தேக்க முடியும். இந்த சூழலில் 60 டிஎம்சி கொள்ளளவில் மேகேதாட்டுவில் புதிய‌ அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் வெகுவாக பாதிக்கப் படுவார்கள் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in