

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை நீட்டிக்கிறது. எனினும், மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த தடையால் பலன் பெறும் கட்சியாக இருப்பது எது? எனும் கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் நேரடிப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளாகப் பொதுக்கூட்டங்களும், சாலையோரப் பிரச்சாரங்களுக்கும் கூடத் தடை நீட்டிக்கிறது. இந்த தடையை பிப்ரவரி 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மட்டுமே காணொலிப் பிரச்சாரத்தில் களைகட்டி வருகிறது. இதற்கு முக்கிய தேசியக் கட்சியாகி விட்ட பாஜக நவீன டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முன்கூட்டியே தயாரானது காரணமாகி இருந்தது.
இதில், 3டி எனும் முக்கோண வடிவப் பரிமாணங்களில் இணையதளம் வழியாக தம் தலைவர்களின் பிரச்சாரம் தொடர வழி வகுத்திருந்தது. இந்த உரைகளை, ஒரே சமயத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் கைப்பேசிகள் வழியாக ஒளிபரப்ப முடியும்.
இதற்கான மாதிரிக் கூட்டங்களும் வெற்றிகரமாக பாஜக நடத்தி இருந்தது. பாஜகவின் ஐ.டி தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தன் கட்சியினரில் சுமார் மூன்று லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்காக சிறப்பு செயலிகளும் பாஜகவால் உருவாக்கப்பட்டு விட்டன. இதற்கு ஏற்றவகையில், தேர்தல் அறிவிப்பில் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, காணொலியில் மட்டுமே பிரச்சாரங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலால் அனைத்து அரசியல் கட்சிகளும் செயலிழந்து விட்ட நிலையில், பாஜக மட்டுமே தன் நடவடிக்கைகளை தொடர்ந்தது. இதற்கு அக்கட்சி கானொலி வாயிலாக கூட்டங்களை நடத்தியது பலன் தந்தது.
இதனால், தேர்தல் அறிவிப்பிற்கு பின் பாஜகவிடம் எந்த மாற்றமும் இன்றி அதன் பிரச்சாரம் காணொலியில் தீவிரமாக நடைபெறுகிறது. அதேசமயம் தேர்தல் அறிவிப்பிற்கு சற்று முன்னதாகவும் பாஜக உத்தரப் பிரதேசத்தில் பல கூட்டங்களை நடத்தி தனது பிரச்சாரங்களை மறைமுகமாகச் செய்திருந்தது.
தேர்தல் அறிவிப்பிற்கு 48 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியே 17 முறை உத்தரப் பிரதேசத்திற்கு வந்து 13 பெரியக் கூட்டங்களை நடத்தி இருந்தார். மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா 12 முறை மற்றும் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா 13 முறைகளும் உத்தரப் பிரதேசம் வந்தனர்.
உத்தரப் பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் உ.பி.யின் 75 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களை நடத்தி முடித்தார். இந்தவகையில் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் ஓரளவிற்குப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி இருந்தார்.
இக்கட்சி, 2017 இல் தம் கட்சியின் சமூகவலைதளப் பிரிவை துவக்கி இருந்தது. தற்போது அதன் உதவியால் சமூகவலைதளங்களில் சமாஜ்வாதி பிரச்சாரத்தை தொடர்கிறது.
ஆனால், மற்ற எதிர்கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் இதுவரையும் ஒரு பெரிய கூட்டத்தையும் உத்தரப் பிரதேசத்தில் நடத்தவில்லை. தேர்தல் அறிபிப்பிற்கு பின் ட்விட்டரில் மட்டும் தன் கருத்துக்களை தலைவர் மாயாவதி பதிவேற்றம் செய்து வருகிறார்.
பகுஜன் சமாஜின் தேசியப் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ரா மட்டும் முகநூல் வாயிலாக நேரடிப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
மூன்றாம் நிலையில் உள்ள எதிர்கட்சியானக் காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வத்ராவும் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே இவற்றை அவர் நிறுத்தி விட்டார்.
இதற்கு கரோனா பரவலை காரணமாக முன்னிறுத்தியவர், தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு சமூகவலைதளங்களிலும் பிரச்சாரம் தொடங்கவில்லை. கடைசிநேரமாக நேற்று முன் தினம் முதல் சமூகவலைதளங்களில் பிரியங்கா மட்டும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
அரசியல் கட்சிகளில் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் டிஜிட்டல் முறை பிரச்சாரத்தை புதிதாகத் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி முதலில் பயன்படுத்தியது. இதன் பலனாக அக்கட்சிக்கு டெல்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
எனவே, உத்தரப் பிரதேசத்தில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்வதில் தனித்திருக்கவில்லை. எனினும், ஆம் ஆத்மி விடத் தீவிரமாக பாஜக 2014 மக்களவை தேர்தல் முதல் சமூக வலைதளங்களில் கூட்டங்கள் நடத்துகிறது.
இதனால், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவிற்கு நிகரான பிரச்சாரத்தை ஆம் ஆத்மி உள்ளிட்ட எந்தக் கட்சிகளாலும் செய்ய முடியவில்லை. இதன் தாக்கம் என்ன என்பது மார்ச் 10 இல் வெளியாகும் அதன் முடிவுகளில் தெரியும்.