Published : 31 Jan 2022 01:50 PM
Last Updated : 31 Jan 2022 01:50 PM

ஒமைக்ரானைவிட மிகவும் கொடியது 'ஓ மித்ரோன்' - தொடரும் சசி தரூரின் வார்த்தை விளையாட்டு அரசியல்

புதுடெல்லி: ஒமைக்ரானைவிட பிரதமர் மோடி தனது பேச்சுகளின்போது மக்களை நோக்கிச் சொல்லும் 'ஓ மித்ரோன்' மிகவும் அபாயகரமானது என வார்த்தைகளால் விளையாடிச் சாடியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.

கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சரி தரூர். இவர் நாடாளுமன்ற எம்.பி.க்களிலேயே ஆங்கிலப் புலமைக்காகவும், வார்த்தை ஜாலங்களுங்காகவும் அறியப்படுகிறார். இந்நிலையில் இவர் மோடியை விமர்சிக்க மீண்டும் தனது வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”ஒமைக்ரானைவிட மிகவும் கொடியது மோடியின் 'ஓ மித்ரோன்'. நாங்கள் 'ஓ மித்ரோன்' விளைவை அன்றாடம் அளந்து வருகிறோம். அதிகரிக்கும் பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரங்கள், மதவெறி, நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் மற்றும் வலுவிழக்கும் ஜனநாயகம் ஆகியன இதன் அளவுகோளாக இருக்கின்றன. ஓ மித்ரோனை பொறுத்தவரை லேசான உருமாறிய வைரஸ் என்றெல்லாம் பாகுபாடே இல்லை” என்று கூறியுள்ளார்.

மித்ரோன் என்றால் இந்தி மொழியில் நண்பர்களே என அர்த்தம். பிரதமர் மோடி தனது பேச்சில் நாட்டு மக்களை இப்படி நண்பர்களே (ஓ மித்ரோன்) என்ற அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சசி தரூரின் இந்த ட்வீட் இணையவெளியில் கவனம் பெறவே, பாஜக செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, "நாட்டின் கரோனா நிலவரத்தை எள்ளி நகையாடும் விதமாக சசி தரூர் பேசியுள்ளார். அவருடைய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எப்போதும் கரோனா பற்றி பெரிதாகப் பேச, இவரோ நிலைமையை நகைப்புக்குரியதாக ஆக்கியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே சசி தரூர் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடியோவைப் பகிர்ந்து, இந்த தேசமே ஓர் இடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

— Shashi Tharoor (@ShashiTharoor) January 29, 2022

அதற்கு முன்னதாக ஜனவரி 26 ஆம் தேதி அவர் பதிவிட்ட ட்வீட்டில் பாஜக, காங்கிரஸ்காரர்களால் ஆன கட்சி என்று விமர்சித்திருந்தார். பிரதமர் மோடி எல்லா மேடைகளிலும் காங்கிரஸ் முக்த் பாரத் (‘Congress mukt Bharat’ ) அதாவது காங்கிரஸே இல்லாத பாரதம் என முழங்கி வர, சசி தரூரோ பாஜகவை “Congress-yukt BJP (Congress (leaders)-laden BJP)”, அதாவது காங்கிரஸ் தலைவர்களால் ஆன பாஜக என்று விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x