Last Updated : 09 Apr, 2016 10:41 AM

 

Published : 09 Apr 2016 10:41 AM
Last Updated : 09 Apr 2016 10:41 AM

மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

மேற்குவங்க மாநிலத்துக்கு 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஏற்கெனவே முதல் கட்டத் தேர்தலின் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்டங்களுக்கான தேர்தல் பிரச் சாரம் அம்மாநிலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த முறையும் பவானிபூர் தொகுதியில் போட்டி யிட முடிவு செய்துள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆதரவாளர்கள் புடைசூழ அலிபூரில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அங்கிருந்து நேரடியாக அசன்சால் புறப்பட்டுச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுகிறது. இதனால் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை தோற்கடிக்க மம்தா தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என திரிணமூல் தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மம்தாவுக்கு கடுமையான போட்டி அளிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் வலுவான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியும், பாஜக சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளு பேரனான சந்திர குமார் போஸும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களும் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல் லோக் ஜனசக்தி சார்பில் திருநங்கை பாபி ஹால்டரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தீபா தாஸ் முன்ஷியை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வார்த்தையால் சீண்டினர். அப்போது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x