

அராரியா: பிஹார் மாநிலம் அராரியா மாவட்டம் பார்கமா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீர்நகரைச் சேர்ந்தவர் முகமது மேஜர் (48). கடந்த டிசம்பர் 1-ம் தேதி 6 வயது தலித் குழந்தையை பலாத்காரம் செய்ததாக முகமது மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பார்கமா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ரீட்டா குமாரி, முகமது மேஜர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டப் பிரிவுகளின் கீழ் கடந்த ஜனவரி 12-ம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த குற்றப்பத்திரிகையை 20-ம் தேதி ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 22-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்தது. 25-ம் தேதி முகமது குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 27-ம் தேதி அவருக்கு மரண தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட 15 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சம்பவம் நடந்த 56 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைத்துள்ளது. பலாத்கார வழக்குகளில் விரை வாக தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கு முன் உதாரணமாக இந்த வழக்கு விளங்குகிறது.
- பிடிஐ