Published : 31 Jan 2022 08:21 AM
Last Updated : 31 Jan 2022 08:21 AM
புதுடெல்லி: மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப் பட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.
வரும் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. பாஜக 33 முதல் 37 தொகுதிகளையும் காங்கிரஸ் 13 முதல் 17 தொகுதிகளையும் கைப் பற்றக்கூடும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் கட்சிகள் காங்கிரஸுடன் கைகோத்துள்ளன.
இந்த சூழலில் மணிப்பூரின் 60 தொகுதிகளுக்கான வேட் பாளர்களை பாஜக நேற்று அறிவித்தது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா ஆகியோர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.
முதல்வர் பிரேன் சிங், தனது ஹெயின்காங் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "60 வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டாவின் வழிகாட்டுதலில் மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனினும் என்பிபி, என்பிஎப் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த முறை பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னணி ஊடகங் கள் கணித்துள்ளன.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT