Published : 30 Jan 2022 07:22 AM
Last Updated : 30 Jan 2022 07:22 AM

பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியது: அமெரிக்க நாளிதழ் செய்தியால் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி

கடந்த 2017-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென் பொருள் மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர் கள், செய்தியாளர்கள், தொழிலதி பர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 50,000 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தியாவில் 40 செய்தியாளர் கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப் பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த பின்னணியில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பெகாசஸ் மென்பொருள் தொடர்பாக கடந்த 28-ம் தேதி விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து, ஹங்கேரி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து இந்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"பல ஆண்டுகளாக பாலஸ் தீனத்தின் உரிமைக்காக இந்தியா குரல் கொடுத்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் அன் றைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடற்கரையில் நின்று உரையாடினர்.

ரூ.15,000 கோடி மதிப்பில்..

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து ரூ.15,000 கோடி மதிப்பில் பெகாசஸ் உளவு மென்பொருள், ஏவுகணைகள் வாங்கப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது" என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியால் இந்தியாவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்ரேலில் இருந்து பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா, இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத் தியுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "மோடி அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்கள் உளவு பார்க்கப்பட்டன. இது தேசத் துரோகம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.

நியூயார்க் டைம்ஸை யார் நம்புவார்?

மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "நியூயார்க் டைம்ஸை நம்ப முடியுமா? அந்த ஊடக நிறுவனத்துக்கு, பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடும்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, "பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x