Last Updated : 30 Jan, 2022 07:14 AM

 

Published : 30 Jan 2022 07:14 AM
Last Updated : 30 Jan 2022 07:14 AM

கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்காக 30 ஆண்டுகள் பாரம்பரிய முறையில் விடா முயற்சி; மலையில் ஒன்றல்ல இரண்டல்ல... 8 சுரங்கங்கள் தோண்டிய விவசாயி: வறண்ட நிலத்தை பசுஞ்சோலையாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு

மலையை குடைந்த மகாலிங்க நாயக்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள அத்யநடுகாவை சேர்ந்தவர் மகாலிங்க நாயக் (77). நிலமற்ற விவசாய தொழிலாளி. இவருக்கு 1978-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நிலச்சுவான்தார் மஹாபால பட், மலை அடிவாரத்தில் 2 ஏக்கர் தரிசு நிலத்தை தானமாக வழங்கினார். நிலத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் கிணறு வெட்ட முயற்சித்தார். பாறைகள் நிறைந்த கரடு முரடான மலைப்பகுதியாக இருந்ததால் கிணறு வெட்ட முடியவில்லை.

அதனால் பாரம்பரிய முறைப்படி மலைமுகட்டுக்கு கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி, தனது நிலத்துக்கு தண்ணீரை கொண்டுவர திட்டமிட்டார். 30 ஆண்டுக்கு முன்பு பகலில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து சுரங்கம் வெட்டும் வேலையில் ஈடுபட்டார். வறுமை காரணமாக வேலைக்கு யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. இரவு பகலாக 30 மீட்டர் தூரத்துக்கு தனி ஆளாக சுரங்கம் வெட்டிய போதும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் சோர்வடையாமல் 2-வது சுரங்கத்தை 24 மீட்டர் தூரம் வெட்டினார். அதிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், ‘‘வறண்ட கரட்டில் இருந்து எப்படி தண்ணீர் வரும்?’’ என்று ஏளனம் செய்தனர். எனினும் மகாலிங்க நாயக் விடாமுயற்சியுடன் 3 மற்றும் 4-வது சுரங்கத்தையும் தோண்டினார். அதிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதன்பிறகு அக்கம் பக்கத்தவர்களின் ஏளன பேச்சு அதிகரித்தது.

அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத மகாலிங் நாயக், ஒரு கட்டத்தில் வெளியில் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டு இரவு பகலாக 5-வது சுரங்கத்தை தோண்டினார். இரவில் மண்ணெண்ணெய் விளக்கின் உதவியுடன் 36 மீட்டர் வரை சுரங்கம் வெட்டினார். 36-வது மீட்டரில் நின்று கொண்டு சுரங்கம் வெட்டிய போது மேலிருந்து தலை மீது மண் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.

எனினும் மனம் தளராமல் அமர்ந்த நிலையில் மேலும் 10 மீட்டர் சுரங்கத்தை குடைந்தார். அப்போது மலையின் நீருற்றை கண்டார். 5-வது சுரங்கத்தில் சுரந்த நீரை தேக்க 6 மீட்டர் ஆழம் 15 மீட்டர் நீளத்துக்கு வீட்டின் அருகே குளம் அமைத்தார். அடுத்த 5 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது. அந்த நீரைக் கொண்டு தனது நிலத்தில் பாக்கு, தென்னை மரங்களை நட்டார்.

நீரூற்றை கண்ட மகிழ்ச்சியில் மகாலிங்க நாயக் 6, 7, 8 என சுரங்கங்களை தனி ஆளாக வெட்டினார். அதிலும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்த தண்ணீரை கொண்டு 2 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, மிளகு, முந்திரி, வாழை ஆகியவற்றை முழு வீச்சில் சாகுபடி செய்தார். மேலும் நிலத்தில் தண்ணீர் வழிந்தோடும் இடங்களில் 300 குழிகளை அமைத்து மழைநீரையும் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தினார். அந்த குழிகளால் அங்கு நிலத்தடி நீரின் மட்டமும் உயர்ந்தது.

இவரது விடாமுயற்சி மற்றும் நுட்பமான பாரம்பரிய முயற்சியால் 30 ஆண்டுக்கு முன் மலைக் கரடாக காய்ந்திருந்த நிலம் இப்போது பசுஞ்சோலையாக மாறியது. வேலைக்கு ஆள் வைக்காமல் தனி ஆளாக 30 ஆண்டுகளாக வெட்டிய சுரங்கங்களில் இருந்து சுரந்த நீரால் அந்த பகுதி விவசாயிகளுக்கு மகாலிங்க நாயக் வழிகாட்டியாக மாறினார்.

அவரது இந்த முயற்சியை அடிகே பத்ரிகே (பாக்கு பத்திரிகை) ஆசிரியர்  பத்ரே கடந்த 2002-ல் முதல் முறையாக எழுதினார். இந்த செய்தி வெளியான பிறகு ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவரது தோட்டத்தை பார்வை யிட்டு, சுரங்கம் மூலமாக நீர் பெறும் முறைக்கு மாறினர்.

மகாலிங்க நாயக் தனி ஆளாக கடுமையாக உழைத்து 30 ஆண்டுகள் சுரங்கம் வெட்டி தனது நிலத்துக்கு நீரை கொண்டு வந்து விவசாயம் மேற்கொண்டதை பாராட்டும் வகையில் மத்திய அரசு அண்மையில் அவருக்கு பத்ம விருது அறிவித்து கவுர வித்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந் துள்ள விவசாயி மகாலிங்க நாயக்கிற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, விவசாய அமைப்பினர் உள்ளிட்டோர் வாழ்த் துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x