

முசாபர்நகர்: 'உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருந்து ஜெயந்த் பாய் வெளியேற்றப்படுவார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சமாஜ்வாதி - ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, "நேற்று அகிலேஷ் யாதவும், ஜெயந்த் சவுத்ரியும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தாங்கள் ஒன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை மட்டுமே இந்தக் கூட்டணி நீடிக்கும். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருந்து ஜெயந்த் பாய் வெளியேற்றப்படுவார். மாறாக ஜெயிலுக்குச் சென்ற அசாம் கான் அமைச்சரவையில் இடம்பெறுவார். தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலே கூறும்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "அகிலேஷுக்கு வெட்கமே இல்லை. நேற்று இதே முசாபர்நகரில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறினார். ஆனால் எங்கள் ஆட்சியின் சாதனை புள்ளிவிவரங்களை தெரிவிக்க நான் முசாபர்நகர் வந்துள்ளேன். அவருக்கு தைரியம் இருந்தால் நாளை செய்தியாளர் சந்திப்பில் அவரின் ஆட்சியின் புள்ளிவிவரங்களை சொல்லட்டும்.
வாக்களிப்பதில் நீங்கள் தவறு செய்தால், உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் கலவரக்காரர்கள் ஆட்சிக்கு வருவார்கள். மாயாவதி ஆட்சிக்கு வந்தால் ஒரு சாதியைப் பற்றி பேசுவார். காங்கிரஸ் கட்சி வந்ததால் அவர்கள் குடும்பத்தைப் பற்றி சிந்திப்பார்கள். அகிலேஷ் ஆட்சி அமைந்தால் மீண்டும் மாஃபியா ராஜ்ஜியம் வரும். பாஜகவுக்கு வாக்களித்தால் உத்திரப் பிரதேசத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்" என்று அமித் ஷா பேசினார்.