உ.பி தேர்தல் களத்தில் டிஜிட்டல் திரை: ஜன.31 முதல் 21 தொகுதி வாக்காளர்களுக்காக காணொலியில் மோடி உரை

பிரதமர் மோடி | கோப்புப் படம்.
பிரதமர் மோடி | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஜனவரி 31 முதல் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் தொடங்குகிறார். முதல்கட்ட தேர்தல் தொகுதிகளில் அவர் காணொலியில் உரையாற்றுகிறார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, இந்த ஏழு கட்ட தேர்தலிலும் நேரடிப் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறிய குழுக்களுடன் வாக்காளர்களின் வீடு வாசலில் சந்தித்து வாக்கு சேகரிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியை அமரவைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கைரானாவிலிருந்து தனது நேரடிப் பிரச்சாரத்தை தொடங்கினார். பிறகு மதுரா, சம்பல் சென்றவர் முதல்கட்ட தேர்தல் தொகுதிகளில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சஹரான்பூர் மற்றும் முசாபர்நகர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார்.

முதல்கட்ட தேர்தலுக்காக மோடி காணொலி உரை: அமித் ஷாவை அடுத்து உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் பிரதமர் மோடி இறங்குகிறார். ஜனவரி 31-இல் அவரது முதல் காணொலிப் பிரச்சாரம் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், பிரதமர் மோடி முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 21 தொகுதிகளில் ஐந்து மாவட்ட வாக்காளர்களை சென்றடையும் வகையில் உரையாற்றுகிறார்.

டிஜிட்டல் திரைகளில் மோடி: இக்கூட்டத்தின்போது ஐந்து மாவட்டங்களில் பாஜகவின் மண்டலவாரியான அலுவலகங்களின் முன் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் நேரடிப் பிரச்சாரத் தடை விலக்கப்பட்டால், பிரதமர் மோடியின் கூட்டத்தில் மாற்றம் செய்யப்படவும் உள்ளது. காணொலிக் கூட்டத்தில் சுமார் 50,000 பேர் வரை கலந்துகொள்ள வைக்கப்படுவார்கள் எனவும் எதிர்நோக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in