

பாட்னா: ரயில்வே பணியாளர் வாரியத்தின் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குறைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வோம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழு, தேர்வர்களின் கருத்துகளை கேட்க தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் 2021-ம் ஆண்டுக்கான என்டிபிசி (Non-Technical Popular Categories) தேர்வை 2 கட்டங்களாக நடத்த ரயில்வே முடிவு செய்ததற்கு எதிராக பிஹாரில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அறிவிப்பாணையில் ஒரு தேர்வு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் 2-ம் கட்ட தேர்வு தங்கள் எதிர்காலத்தோடு விளையாடுவதாக குற்றம்சாட்டி குடியரசு தினம் அன்று பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. கயாவில் காலி ரயில் ஒன்றுக்கு மாணவர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, அறிவிப்பாணையில் 2-ம் கட்ட தேர்வு குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ள நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் "ரயில்வே தேர்வர்களின் தேர்வு குறித்த கவலைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரயில்வே தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வோம். இதற்காக அமைக்கப்பட்ட மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழு, தேர்வர்களின் கருத்துகளை ஏற்கனவே பெறத் தொடங்கியுள்ளது.
தேர்வர்களின் குறைகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் பரந்த அனுபவமுள்ள மிக மூத்த அதிகாரிகளைக் கொண்டது. அதிகாரிகள் மாணவர் குழுக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெறுகிறார்கள். மாணவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்படும். யாருடைய வார்த்தைகளாலும் குழப்பமடையவோ அல்லது பாதிப்படையவோ தேவையில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ரயில்வே உள்கட்டமைப்பு என்பது பொதுச் சொத்து என்பதால், சாலை மறியலோ, ரயிலை எரிக்கவோ, தீ வைக்கவோ தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட தூண்டியதாக பிரபல யூடியூபர் கான் சார் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்டித்து இன்று பிஹாரில் மாணவர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் நடந்த போராட்டத்தில் டயர்கள் எரிக்கப்பட்டும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டும் வருகிறது. இதனால் தொடர்ந்து பிஹார் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.