

புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது .
உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. கடந்த 1983-ம் ஆண்டு முதல்இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன.
இந்த ஏவு கணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து கப்பல்களை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புத் துறையுடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டு நிறுவனமாகும்.
பொறுப்பான பாதுகாப்பு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான படியாகும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.