Last Updated : 28 Jan, 2022 05:41 PM

Published : 28 Jan 2022 05:41 PM
Last Updated : 28 Jan 2022 05:41 PM

’என்னை பெரியார் கொள்கைகள் வழிநடத்தின’ - பஞ்சாப் தேர்தலில் சித்துவை எதிர்ப்பதற்காக ராஜினாமா செய்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி

அமிர்தசரஸ்: தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்பட்ட ஜக்மோகன் சிங் ராஜூ நேற்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், பஞ்சாப் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜக்மோகன் சிங் ராஜூ, காங்கிரஸின் பஞ்சாப் மாநில தலைவராக இருக்கும் சித்துவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு மேல் உள்ள நிலையில் நேற்று திடீரென விருப்ப ஓய்வு கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். முதல்வர் முக ஸ்டாலினுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், "எனது சொந்த மாநிலத்தின் வேதனை நிறைந்த சூழ்நிலை என் மனசாட்சியை உலுக்குகிறது. தாய் மண்ணை நேசிக்கும் ஒரு மகன், என் மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக, ஒரு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், 3 மாதங்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். ஆனால், ஜக்மோகன் சிங் ராஜூவுக்காக விதியை தளர்த்தப்பப்பட்டு உடனடி ஓய்வு கொடுக்கப்பட்டது. நேற்று மாலை அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரத்தில், பாஜக சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பஞ்சாபின் ஸ்டார் தொகுதியான அமிர்தசரஸ் கிழக்கில் ஏற்கெனவே காங்கிரஸ் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது ஜக்மோகன் சிங் ராஜூவும் களமிறங்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜக்மோகன் சிங் ராஜூ தனது அரசியல் பிரவேசம் குறித்து ’தி பிரின்ட்’ தளத்துக்கு விரிவாக பேசியுள்ளார். அதில், "1980களில் நான் பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தேன். தமிழ்நாடு வந்தபோது பஞ்சாப் எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சி, விவசாயம், சமூக நீதி என அனைத்து அம்சங்களிலும் பஞ்சாப் மோசமாக சரிவை சந்தித்துள்ளது. தமிழ்நாடு உயர்ந்த நிலையிலும், பஞ்சாப் சரிவிலும் உள்ளது. எனவே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பஞ்சாபிறகு திரும்பி செல்ல ஆலோசித்து வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தற்போது பஞ்சாபில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசிய ஜக்மோகன் சிங் ராஜூ, "பஞ்சாபில் இப்போது தேர்தல் என்றால் வசைபாட தொடங்கிவிடுகிறார்கள். வேட்பாளர்கள் ஒருவரையொருவர் தவறான வார்த்தைகளில் திட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் பஞ்சாபின் வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. பஞ்சாபின் வளர்ச்சி மத்திய அரசு மூலமாகவே வர முடியும். மத்திய - மாநில ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கேடரின் 1985-பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ தனது 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இணைந்தவர். இவரின் மனைவி அனு சிங், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் அதிகாரியாக பணியாற்றியுள்ள ராஜூ, பெரியாரின் போதனைகள் முதல் சுயமரியாதை வரலாறு வரை தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று சிலாக்கிறார்.

விருப்ப ஓய்வு வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தபோது, ​​எனது மனசாட்சியே கலங்கியது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்குச் சேவை செய்வதில் ஸ்டாலினின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உள்ளதாகவும் என்றும் நெகிழ்ந்துள்ளார்.

மேலும், "எனது வாழ்க்கை முழுவதும் சீக்கிய குருக்களின் போதனைகளாலும், பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் ‘பெரியார்’ ஈ.வெ. ராமசாமி கொள்கைகளாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் இரண்டும் வலுவான பிராந்திய கட்சிகளால் ஆளப்படுவது முதல், பல வழிகளில் மிகவும் ஒற்றுமை மிகுந்ததாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், பஞ்சாப் இப்போது வளர்ச்சியில் அடிமட்டத்துக்கு போய்விட்டது, அதே நேரத்தில் தமிழ்நாடு எழுச்சி பெற்றுள்ளது" என்றும் அந்தக் கடிதத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x