

புதுடெல்லி: நானும் என்சிசியின் தீவிர உறுப்பினராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் கரியப்பா மைதானத்தில் என்சிசி படையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி படையினரின் திறமைகளை பார்வையிட்டதோடு, அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் என்சிசி வீரர்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ பீரங்கிகள் அணிவகுப்பு, பாரசூட் சாகசங்கள் இடம் பெற்றன. தொடர்ந்து சிறந்த வீரர்களுக்கு பதங்கங்களையும், பரிசுகளையும் மோடி வழங்கினார்.
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் என்சிசி படையினர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயுத படைகளில் பெண்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பேரணியில் ஏராளமான பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதுதான் இந்தியா இன்று கண்டுள்ள மாற்றம். நானும் என்சிசியின் தீவிர உறுப்பினராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
உங்களின் உறுதியுடனும் ஆதரவுடனும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.