

பெங்களூருவின் பாரம்பரிய பச்சை கரக திருவிழாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தர்மராயா சுவாமி கோயில் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை பெங்களூரு மாநகராட்சியும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அம்மன் கோயில் தேர் திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 200-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவின் பச்சை கரக திருவிழாவின் போது, பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தர்மராயா சுவாமி கோயில் நிர்வாகி குணசேகர் கூறுகையில், ''பெங்களூருவில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பச்சை கரக திருவிழா இந்த ஆண்டு 14-ம் தேதியில் வருகிற 22-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா 19-ம் தேதி தீப உற்சவம் நடைபெறுகிறது. இதையடுத்து 22-ம் தேதி இரவு திகளர்பேட்டையில் உள்ள தர்மராயா சுவாமி கோயிலில் இருந்து தொடங்கும் கரகம் நகர்வலம் சென்று மறுநாள் காலையில் மீண்டும் கோயில் வந்து சேரும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீபமும், கரகமும் ஏந்துகின்றனர்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக இறுதி நாளன்று வான வேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற பச்சை கரக திருவிழாவில் சுமார் ரூ. 5 லட்சம் வரை பட்டாசு வெடிப்பதற்கு செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கரக திருவிழாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது''என்றார்.
தர்மராயா சுவாமி கோயில் நிர்வாகத்தின் இந்த தீர்மானத்தை பெங்களூரு மாநகராட்சி மேயர் மஞ்சுநாத் ரெட்டி, ஆணையர் குமார் நாய்க் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இதே போல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பெங்களூரு மார்க்கெட் வணிகர் சங்க கூட்டமைப்பும் வரவேற்று, பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.