Published : 27 Jan 2022 07:14 PM
Last Updated : 27 Jan 2022 07:14 PM

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள்; நிபந்தனைகளுடன் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு நிபந்தனை சந்தை இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அரசு சார்பில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்டபோது கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.

இந்த இரு தடுப்பூசிகளும் முழுக்க முழுக்க அரசு மருத்துவ ஏற்பாடுகள் மூலமும், அரசு அனுமதியுடன் தனியார் மருத்துவமனைகள் மூலமும் இந்தியா முழுவதும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதேசமயம் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் வெளிச்சந்தையில் விற்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் இந்திய தலைமை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பு, கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சந்தையில் விற்பனை செய்ய அங்கீகார அனுமதியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழுவின் பரிந்துரையை ஏற்று, கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு , கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டு நடைமுறையிலிருந்து, வயது வந்தோருக்கு பயன்படுத்தும் புதிய மருந்து என்னும் மேம்பாட்டு அனுமதி ஜனவரி 19-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பரிசோதனைகளின் தரவுகளைப் பகுப்பாய்வு விவரத்துடன் ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோ, எது முன்னதோ அப்போது வழங்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு சந்தை அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

மேலும், உள்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசி பற்றிய விவரங்கள் அனைத்தும் கோவின் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுபற்றிய தரவுகளை ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோ, எது முன்னதோ அப்போது வழங்கவேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x