இந்திய சிறுவனை ஒப்படைப்பதில் சீனா சாதகமான பதில்: மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

இந்திய சிறுவனை ஒப்படைப்பதில் சீனா சாதகமான பதில்: மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: காணாமல் போன இந்திய சிறுவனை ஒப்படைப்பதில் சீன ராணுவம் சாதகமான பதிலை அளித்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அருணாச்சல் பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் சிறுவன் மிரம் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்டையாடச் சென்றபோது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் புகார் தெரி வித்திருந்தனர்.

இந்த சம்பவம் மத்திய அரசுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறும்போது, “காணாமல் போன இந்தியச் சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தியச் சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவப் பிரிவினர் (பிஎல்ஏ) சாதகமான பதிலை நமக்குத் தந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகளும், சீனராணுவ அதிகாரிகளும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

எந்த இடத்தில் ஒப்படைப்பது

எந்த இடத்தில் சிறுவனை ஒப்படைப்பது என்பது தொடர்பாகவும் இந்தியா யோசனை தெரிவித்துள்ளது. விரைவில் அந்தத் தேதியை சீன ராணுவம் தெரிவிக்கும். மோசமான வானிலை அங்கு நிலவுவதால் சிறுவனை ஒப்படைப்பதில் தாமதம் நிலவுகிறது” என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in