

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நேற்று டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வீர தீர செயல்புரிந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இதில் அமைதிக்கால வீர தீர செயலுக்கான 3-வது மிகப் பெரிய விருதான சவுரிய சக்ரா விருது 12 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் 6 பேர் ராணுவத்தையும் 6 பேர் சிஆர்பிஎப் படையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
ராணுவத்தை சேர்ந்த நாயப் சுபேந்தர் ஜித் (மெட்ராஸ் ரெஜிமென்ட்), ஹவில்தார் அனில் குமார் தோமர் (ராஜ்புத் ரெஜிமென்ட்), ஹவில்தார் காசிராய் பம்மனல்லி (இன்ஜினீயர்ஸ் கார்ப்ஸ்), ஹவில்தார் பிங்கு குமார் (ஜாட் ரெஜிமென்ட்), சிப்பாய் ஜஸ்வந்த் குமார் ரெட்டி, ரைபிள் மேன் ராகேஷ் சர்மா (அசாம் ரைபில்ஸ்) ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதில் முதல் 5 பேர் பணியின் போது உயிர் தியாகம் செய்தனர். அவர்களுக்கு இறப்புக்கு பின் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிஆர்பிஎப் படையில் விருது பெற்ற திலீப் மாலிக், அனிருத் பிரதாப் சிங், அஜீத் சிங், விகாஸ் குமார், பூர்னானந்த், குல்தீப் குமார் உரவான் ஆகிய 6 பேரில் கடைசி 4 பேர் உயிர் தியாகம் செய்தவர்கள். அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.