

புதுடெல்லி:நாட்டின் 73வது குடியரசு தின விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லி ராஜபாதையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
குடியரசு தின நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு, பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதோடு,அணிவகுப்பில் பங்கேற்கும் சிறந்த அலங்கார ஊர்தியை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அசோக சக்ரா விருது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி மூன்று தீவிரவாதிகளை கொலை செய்துவிட்டு வீரமரணமடைந்த சிறப்பு காவல் ஆய்வாளர் பாபு ராமுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை அவருடைய மனைவி ரீனா ராணி, மற்றும் மகன் மாணிக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பிரதமர் வரவேற்பு: முன்னதாக டெல்லி ராஜபாதைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவர் வருகை தந்ததும், தேசியக் கொடியை ஏற்றிவைக்கப்பட்டது. 871 ஃபீல்ட் ரெஜிமென்ட் வீரர்கள் 21 குண்டுகளை முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் முப்படைகளின் அணிவகுப்பைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இந்திய விமானப் படையின் 75 விமானங்கள்/ ஹெலிகாப்டர்கள் பங்கேற்கும் கண்கவர் வான்அணிவகுப்பு, வந்தே பாரதம் நடனப் போட்டி மூலம் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 480 நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், ‘காலா கும்ப் ‘ நிகழ்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட தலா 75 மீட்டர் உடைய பத்து சுருள்களின் காட்சி, பார்வையாளர்களின் வசதிக்காக 10 பிரம்மாண்ட எல்இடி திரைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், முதன்முதலாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் இனி, ஜனவரி 23 தொடங்கி 30 வரை ஒரு வார காலத்திற்கு, குடியரசு தினத்தைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கும் இந்த கொண்டாட்டங்கள் தியாகிகள் தினமான ஜனவரி 30-ம் தேதி நிறைவடையும்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் ‘அமிர்தப் பெருவிழா‘வாகக் கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாக் கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உத்தரகாண்ட் தொப்பியில் பிரதமர் மோடி: குடியரசு தின விழாவை ஒட்டி முதலில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் விழாவுக்கு வருகைதந்த அவரை மரபுப் படி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவேற்றனர். விழாவிற்கு வந்திருந்த மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தனிச்சிறப்பான தொப்பியை தலையில் அணிந்திருந்தார். வழக்கம்போல் பிரதமரின் உடையும், தொப்பியும் நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.
அணிவகுப்பை அலங்கரித்த பெண் விமானி: ரஃபேல் போர் விமானத்தின் விமானியான இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஷிவாங்கி சிங், இந்திய விமானப் படை அலங்கார ஊர்தியை அலங்கரித்தார். அவர் ஒய்யாரமாக நின்றபடி சல்யூட் செய்ய அரங்கம் அவரை கரகோஷத்தால் வரவேற்றது.
விமானப் படையின் 75 போர் விமானங்களின் சாகசம், 13 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, ராணுவ டாங்கிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் என கோலாகலமாக நடந்த 73வது குடியரசு தின அணிவகுப்பு 12.10 மணியளவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். உடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இருந்தார்.
வழியனுப்பும் நிகழ்ச்சிக்கு முன்னதாக குதிரை வீரர் மரியாதை செலுத்த, அந்தக் குதிரையை குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் என அனைவருமே தடவிக் கொடுத்தனர். கருப்பு நிறக் குதிரை அதை ஏற்றுக் கொண்டு கம்பீரமாக நின்றது.