Published : 26 Jan 2022 07:58 AM
Last Updated : 26 Jan 2022 07:58 AM

என்னிடம் யாரும் சொல்லவில்லை; நான் பத்ம விருதை நிராகரிக்கிறேன்: மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

கொல்கத்தா: எனக்கு பத்ம விருது தருவதாக என்னிடம் யாரும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படிக் கொடுத்திருந்தால் அதை நிராகரிக்கிறேன் என மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் கூறியிருப்பதாவது: எனக்கு பத்ம பூஷண் விருது பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் எனக்குக் கொடுத்திருந்தால் நான் அதனை நிராகரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், நேற்று காலையிலேயே புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவியிடம் விருது பற்றி பேசியதாகவும் அவர் விருதை ஏற்பதாக தெரிவித்து அதற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மோடியின் மிகக் கடுமையான விமர்சகர்களுள் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஒருவர். 77 வயதான அவர் தற்போது உடல்நிலைக் குறைவு காரணமாக வயது சார்ந்த பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

நேற்று அறிவிக்கப்பட்ட விருதுப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது விமர்சனங்களை ஈர்த்தது. இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள். அரசை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு விருது என்று கூறப்பட்டது. இந்நிலையில், பத்ம விருதை நிராகரிக்கிறேன் என மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

பத்ம விருதை இதற்கு முன் நிராகரித்தவர்கள்: சினிமா கதாசிரியர் சலீம் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை நிராகரித்தார். 2005 ஆம் ஆண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம் பூஷண் விருதை நிராகரித்தார். 1974ல் அவருக்கு அளிக்கப்பட்ட விருதை இந்திய ராணுவ சீக்கியக் கோயிலில் நடத்திய தாக்குதலைக் கண்டித்து 1984ல் அவ்விருதை திருப்பியளித்தார். குஷ்வந்த் சிங், 1974ல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை 1984ல் நிராகரித்தார். இருப்பினும் 2007ல் வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறாக கடந்த காலங்களிலும் அரசின் மீதான அதிருப்தியில் பத்ம விருதுகளை நிராகரித்தவர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x