

முசாஃபர்நகர்: அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி சார்பில் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 இந்துக்களுக்கு டிக்கெட் தரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியும் உ.பி. தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இதுவரை உ.பி.தேர்தலுக்காக 27 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநிலத் தலைவர் சவுகத் அலி கூறும்போது, “மதச்சார்பற்ற அடிப்படையில் நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 4 இந்துக்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்.
வரும் நாட்களில் எங்களது இந்து சகோதரர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்குவோம். மதத்தின் அடிப்படையில் நாங்கள் டிக்கெட் வழங்கவில்லை. மத, ஜாதி அடிப்படையில் நாங்கள் டிக்கெட் வழங்குவதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. ஆனால், பாஜக இதுவரை ஒரு முஸ்லிமுக்குக் கூட டிக்கெட் வழங்கவில்லை என்பதே உண்மை.
காஜியாபாத் தொகுதியில் பண்டிட் மன்மோகன் ஜா, புதனாவில் பீம் சிங் பல்யான், ஹஸ்தினாபூரில் வினோத் ஜாதவ், ராம்நகரில் விகாஸ் ஸ்ரீவத்சவா ஆகிய இந்துக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.