Published : 26 Jan 2022 06:58 AM
Last Updated : 26 Jan 2022 06:58 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்க கர்மயோகி பாரத் நிறுவனம் தொடக்கம்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்குவதற்காக ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு 2020-ல் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. லாபநோக்கமற்ற, தன்னாட்சி பெற்ற இந்நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமானதாக இருக்கும். இது மத்திய அரசின் டிஜிட்டல் சொத்துகளை நிர்வகிப்பதுடன் எதிர்கால தேவைக்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சியை இணைய வழியில் வழங்கும். சுமார் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதன் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

இதற்காக 2021 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.510.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்மயோகி பாரத் நிறுவனத்தின் பங்கு முதலீடு ரூ.40 கோடியாக இருக்கும். இது 4 கோடி பங்குகளாக பிரிக்கப்படும். இதில் 3.96 கோடி அல்லது 99% பங்குகள் டிஓபிடி துணைச் செயலாளர் (பயிற்சி) டாக்டர் கார்த்திக் ஹெக்டேகட்டி வசமும் மீதமுள்ள 4 லட்சம் பங்குகள் உள் துறை அமைச்சகத்தின் துணைச் செயலா ளர் சுனிஷ் வசமும் இருக்கும்.

தற்காலிகமாக இந்நிறுவனத் தின் இயக்குநராக டிஓபிடி செயலாளர் இருப்பார். ஏகன் ஜெந்தர் நிறுவன ஆலோசகர் கோவிந்த் ஐயர் நான்-எக்சிகியூட்டிவ் இயக்குநராக இருப்பார். நிரந்தர இயக்குநர்கள் பின்னர் நியமிக்கப்படுவர்.

அரசு ஊழியர்களுக்கான பயிற்சிக்கு தேவையான உள்ளடக்க வடிவமைப்பு, அமல்படுத்துதல், நிர்வகித்தல் ஆகிய பணிகளை கர்மயோகி பாரத் நிறுவனம் மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x