

புதுடெல்லி: கரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் காலை, மாலை என இருவேளைகள் ஷிப்ட் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக் கூட்டத் தொடர்தொடங்குவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு நாளில் வெவ்வேறு ஷிப்டுகளில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. காலையில் மாநிலங்களவையும் பிற்பகலில் மக்களவையும் செயல்பட்டன. சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். அதுபோலவே இம்முறையும் காலையில் மாநிலங்களவையும் பிற்பகலில் மக்களவையும் செயல்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம். எனவே இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கம், மக்களவை, மாநிலங்களவை மற்றும் பார்வையாளர் மாடத்தில் அனைத்து உறுப்பினர்களும் அமர்ந்திருப்பார்கள். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி2 முதல் காலையில் மாநிலங்களவையும் பிற்பகலில் மக்களவையும் செயல்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாநிலங்களவை செயல்படும். மக்களவை பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.