

புதுடெல்லி: நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு தொடந்து 5 நாட்களாக 3 லட்சத்துக்கு மேல் பதிவான நிலையில் நேற்று இது 2,55,874 ஆக குறைந்துள்ளது. இதனிடையே, தொலை மருத்துவ ஆலோசனை வசதியை (டெலி கன்சல்டேஷன்) அதிகரிக்க வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலையில் வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55,874 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 50,190குறைவாகும். மேலும் 5 நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99,202 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 90,462 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய நாளை விட 12,493 குறைந்து, 22 லட்சத்து 36,842 ஆக உள்ளது. மொத்த நோயாளிகளில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 5.62 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.15 சதவீதமாக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை 71.88 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 லட்சத்து 49,108பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் 162.92 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 3-வது அலை உச்சத்தில் உள்ளது. சில மாநிலங்களில் கரோனா பரவல் விகித வேகம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், கரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே, 9 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக், சண்டிகர் ஆகியமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின்போது மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “பல மாநிலங்களில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் உள்ளவர்களுக்கு போதிய மருத்துவ ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அதுபோன்ற பகுதிகளில் தொலை மருத்துவ ஆலோசனை வசதிகளை வழங்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொலை மருத்துவ ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். இதன்மூலம்மருத்துவ நிபுணர்கள் அங்கிருந்தவாறு, நோயாளிகளுக்கு தகுந்தஆலோசனைகளை வழங்க முடியும். குறிப்பாக அனைத்து மாவட்டதலைமை மருத்துவமனைகளிலும் இந்த வசதியை அமைக்க வேண்டும்" என்றார்.- பிடிஐ