

தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு நாடுகளுக்கு முன் உதாரணமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரி வித்தார்.
தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நமோ செயலி மூலம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவினரிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது தேர்தல் ஆணையத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த அளவுக்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் அதிகாரம் மிக்கதாகவும் உள்ளது.
தொடர்ச்சியான தேர்தல்களால் எல்லாவற்றிலும் அரசியல் காணப்படுகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். ஜனநாயகத்தை வலுப் படுத்த வாக்குப்பதிவு மிகவும் புனிதமானது. வாக்குப் பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. நகர்ப்புறங்களில் தேர்தல் பற்றி சமூக ஊடகங்களில் விவாதிக்கின்றனர்.
ஆனால் இவர்கள் வாக்களிக்க செல்வதில்லை. படித்த, வள மான பகுதியாக கருதப்படும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பதை பாஜக தொண் டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். வாக்களிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
- பிடிஐ