

கோலார்: கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரபாளையாவில் அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வகுப்பறைகளிலேயே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் முன்பு பல இந்து அமைப்புகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது, “இதற்கு முன்பு இப்பள்ளி வளாகத்துக்குள் இதுபோன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றது கிடையாது. ஆனால், தற்போது பள்ளி வகுப்பறைக்குள்ளேயே முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் ஆகும். இந்த விவகாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலையிட்டு பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.