

புதுடெல்லி: முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, முஸ்லிம் மற்றும் யாதவர் சமூக ஆதரவில் ஆட்சி அமைக்கும் கொள்கையைக் கொண்டிருந்தது. இதையும் தாண்டி குறி வைக்கும் மகன் அகிலேஷ் சிங் யாதவ், அனைத்து சமூகத்தினருக்கும் போட்டியிட வாய்ப்பளித்துளார்.
உத்தரபிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 முதல் 30% மற்றும் யாதவர்கள் 15 முதல் 20 சதவீதமும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்கள் ஆதரவைப் பெறும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, ‘எம்-ஒய் (முஸ்லிம்-யாதவர்)’ ஆதரவுக் கட்சி என்றழைக்கப்படுகிறது. இக்கட்சி உ.பி.யில் இதுவரை அமைத்த ஆட்சிகளில் முஸ்லிம் மற்றும் யாதவர் சமூகத்தினர் ஆதரவு அடிப்படையாக இருந்தது.
முலாயமின் மகனான அகிலேஷ் சிங், கட்சிக்கு தலைவரான பின் இந்தக் கொள்கையில் மாற்றங்கள் செய்து வருகிறார். குறிப்பாக அவர் தனது கட்சி எம்-ஒய் ஆதரவில் செயல்படுகிறது எனும் கருத்தை மாற்ற விரும்புகிறார். இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் சிங், அனைத்து சமூகத்தில் இருந்தும் வேட்பாளர்களை தேர்வு செய் துள்ளார். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 2 கட்ட தேர்தல் உள்ளிட்ட 159 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டுள்ளது.
இதில், 30 முஸ்லிம், 18 யாதவர்வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 2 சமூகங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள், கடந்த தேர்தல்களை விட இம்முறை சமாஜ்வாதியில் குறைவாகவே இருப்பர் எனக் கருதப்படுகிறது. இதற்கு, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஒன்றுக் கும் மேற்பட்ட முஸ்லிம் வேட் பாளர்களால் வாக்குகள் பிரிந்து பாஜக பலனடைவது காரணமாகி விட்டது.
இவர்களுடன், யாதவர் அல்லாத ஒபிசி வகுப்பினரில் குர்மி 7, நிஷாத் (மீனவர்) 4, குஜ்ஜர் 4, ஜாட் 7 மற்றும் இதர வகுப்புகளில் செய்னி, குஷ்வாஹா மற்றும் மவுரியா வேட்பாளர்களும் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரில் தலித்கள் மற்றும் பழங்குடிகள் 31 பேர் உள்ளனர். உ.பி.யில் மொத்தம் 84 தனித்தொகுதிகள் உள்ளன. எனவே, சமாஜ்வாதியில் பட்டியலினத்தவர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் நிலை உள்ளது.
அகிலேஷ் முதன்முறையாக அதிகமான உயர் வகுப்பினருக் கும் வாய்ப்பளிக்க முடிவு செய் துள்ளார். இதுவரை வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் 15 சதவீகிதமாக 19 உயர் சமூகத்தினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், பிராமின் 8, வைசியர் 6, தாக்குர் 5 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சமாஜ்வாதியின் முஸ்லிம் வேட்பாளர்களில் கைரானாவில் நாஹீத் ஹசன்மற்றும் ராம்பூரில் ஆஸம்கான் ஆகிய இருவரும் சிறையிலிருந்தபடியே போட்டியிட உள்ளனர்.