நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயம்

நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயம்
Updated on
2 min read

நாட்டின் 29-வது மாநிலமாக இன்று தெலங்கானா மாநிலம் உதயமானது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொண்ட தெலங்கானா மாநிலம் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்பாட்டிற்கு வருகிறது. 58 ஆண்டு போராட்டத்தின் பலனாக கிடைத்த தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு, அப்போதைய ஹைதராபாத் மாநிலம் நிஜாம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை இந்தியாவுடன் சேர்க்க இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் மாநிலம், 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

பின்னர், 1956-ம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கு மொழி பேசுவோர் வசிக்கும் ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளுடன் ஹைதராபாத் மாகாணம் ஒன்றிணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.

ஆனால், தெலங்கானா பகுதியில் வளர்ச்சிப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை எனக் கருதிய தலைவர்கள், கடந்த 58 ஆண்டுகளாக தனி மாநிலம் கோரி போராடி வந்தனர். இந்த போராட்டத்தின்போது பலர் உயிரிழந்தனர்.

கடந்த 2009-ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிர் துறந்தனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். பின்னர் மத்திய அரசு பல கமிட்டிகளை அமைத்து ஆய்வு செய்தது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தது. இறுதியில் காங்கிரஸ் அரசின் முயற்சியில், கடந்த பிப்ரவரி 18ம் தேதி, மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேற்றப் பட்டது. தெலங்கானா மாநிலம், இன்று அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம்

தெலங்கானா மாநிலம் உதயமானதை அம்மாநில மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இரவு முதலே தங்களது கட்சி அலுவலகங்களில் புது மாநில கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டன. முதன்முதலாக ஆட்சியை கைப்பற்றி உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் கொடிகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஹைதராபாத்தில் உள்ள நெக்லஸ் ரோடு, பஞ்சாரா ஹில்ஸ், கோட்டி போன்ற இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன.

இரவு 9 மணியில் இருந்து இரவு 11.59 வரை தொடர்ச்சி யாக வாண வேடிக்கைகள் நடந்தன. பின்னர் 12 மணிக்கு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ‘ஜெய் தெலங்கானா’ என வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஜெய் தெலங்கானா கோஷம் காதில் விழுந்துகொண்டே இருந்தது. தெலங்கானா உதயமான தால் தங்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய மாநிலத்தை மக்கள் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in