Published : 25 Jan 2022 07:08 PM
Last Updated : 25 Jan 2022 07:08 PM

‘‘ஒரு தேசம், ஒரே தேர்தல் - ஒரு நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்; விவாதத்திற்கு தயாராவோம்’’- பிரதமர் மோடி

புதுடெல்லி: "ஒரு தேசம், ஒரே தேர்தல் - ஒரு நாடு, ஒரே வாக்காளர் பட்டியல் என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும்; வெவ்வேறு கருத்துக்கள் வெளிவரட்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். 1950-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினத்தில், மோடி இந்த உரையாடலில் பங்கேற்றார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த உரையாடல் முன்பு குஜராத் பாஜக தொண்டர்களுக்காக மட்டுமே இருந்தது. ஆனால், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுக்குமான விவாதமாக நடத்தப்பட்டது.

அப்போது அவர் பேசும்போது, ’ஒரு நாடு, ஒரே தேர்தல் மற்றும் ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல்’ ஆகிய பிரச்சினைகளையும் எழுப்பினார். தொடர்ச்சியான தேர்தல் சுழற்சியின் விளைவாக எல்லாவற்றிலும் அரசியல் காணப்படுகிறது என்று கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, "1951-52 முதல் மக்களவை தேர்தலில் 45% ஆக இருந்த வாக்கு சதவீதம் 2019 இல் 67% ஆக உயர்ந்தது. பெண் வாக்காளர்கள் பங்கேற்பு அதிகரிப்பு ஒரு நல்ல விஷயம். ஆனால் குடிமக்கள் முதல் வெவ்வேறு அரசியல் உறுப்பினர்கள் வரை அனைவரும் குறைந்த வாக்குப்பதிவு குறித்து கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

கல்வியறிவும், பல்வேறு வசதி வாய்ப்புகள் கொண்ட நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப்பதிவு இருப்பதைக் காண முடிகிறது. நகரபுற மக்கள் சமூக ஊடகங்களில் தேர்தலைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால் வாக்களிக்க செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் 75% வாக்குப்பதிவை உறுதிசெய்ய பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவு மிகவும் முக்கியமானது. வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையத்தின் பல முயற்சிகளுக்கு நாம் உறு துணையாக இருக்க வேண்டும்.

வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

ஒரு தேசம், ஒரே தேர்தல் மற்றும் ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல் என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளிவரட்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் வழங்குதல் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் போன்ற அதிகாரங்களும் உண்டு. இந்த அதிகாரம் வலுவான மற்றும் பக்கச்சார்பற்ற தேர்தல் செயல்முறை இருக்கும்போது மட்டுமே உயிரோட்டமான ஜனநாயகம் சாத்தியமாகும் என்பதை அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெரியும் .

சுதந்திரத்தின் நூற்றாண்டு ஆண்டான 2047-க்குள் ஆரோக்கியமான இந்தியா உருவாகும் வகையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக மக்கள் பங்கேற்புடன் பிரச்சாரத்தை பாஜக தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

மக்களவையில் இருந்து, மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அடிக்கடி தேர்தல்களால் வளர்ச்சிப் பணிகள் தடைபடுவதாக அவர் ஆதங்கம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x