Published : 25 Jan 2022 04:16 PM
Last Updated : 25 Jan 2022 04:16 PM

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்தார்: தேர்தலுக்கு முன்பு அடுத்த அதிரடி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் அங்கு கட்சித் தாவும் படலம் தொடர்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

அதேசமயம் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.

அதுபோலவே உ.பி. காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா ஏற்கெனவே அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆர்பிஎன் சிங் காங்கிரஸில் இருந்து இன்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாகவும், கட்சிக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘ இது எனது புதிய தொடக்கம். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழும், வழிகாட்டுதலின்படியும் நாட்டை கட்டமைக்கும் பணியில் நானும் பங்கு கொள்கிறேன்.

நாடு இன்று நமது குடியரசு தினத்தை கொண்டாடும் நேரத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் எனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். ஜெய் ஹிந்த்’’ என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு சென்றார். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாகூர் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x