

புதுடெல்லி: கோவிட் -19 சோதனை நேர்மறை விகிதம் கடந்த 10 நாட்களில் 20% குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தினமும் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கும் தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாசிடிவிட்டி ரேட், அதாவது ஒரு நாளில் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம் 20.7%-ல் இருந்து 15.5% ஆகக் குறைந்துள்ளது. தலைநகர் டெல்லியிலும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
டெல்லியில் கோவிட் -19 சோதனை நேர்மறை விகிதம் கடந்த 10 நாட்களில் 20% குறைந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி சோதனை நேர்மறை விகிதம் ஜனவரி 15 அன்று 30% ஆக இருந்து தற்போது சுமார் 10% ஆக குறைந்துள்ளது. தடுப்பூசியின் சீரான வேகம் காரணமாக இது சாத்தியமானது.
நாங்கள் விரைவில் கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்போம். அந்த திசையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
டிடிஎம்ஏ புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் டெல்லியில் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு தொடரும். டெல்லி அரசின் அனைத்து அலுவலகங்களிலும் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் வைக்கப்படும். இனி எந்த அரசியல்வாதியின் புகைப்படங்களும் வைக்கப்படாது. கடந்த ஏழு ஆண்டுகளில் கல்வித் துறையில் டெல்லியில் புரட்சியைக் கொண்டு வந்துள்ளோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவோம். கடந்த ஏழு ஆண்டுகளில் கல்வித்துறையில் அந்த புரட்சியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், எங்கள் அரசுப் பள்ளிகளையும் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.