இந்தியாவின் தினசரி பாசிடிவிட்டி ரேட் 15.5% ஆகக் குறைவு: கரோனா 3-வது அலையின் ஆறுதல் தகவல்

இந்தியாவின் தினசரி பாசிடிவிட்டி ரேட் 15.5% ஆகக் குறைவு: கரோனா 3-வது அலையின் ஆறுதல் தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியாவின் தினசரி பாசிடிவிட்டி ரேட் 20.7%-ல் இருந்து 15.5% ஆகக் குறைந்துள்ளது என்ற ஆறுதல் தரும் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக 3 லட்சத்துக்கும் மேல் இருந்த கரோனா தொற்று, இன்று 2,55,874 என்ற அளவில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதியானது. கர்நாடகாவில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒமைக்ரான் சமூகப் பரவலை எட்டியுள்ளது. மெட்ரோ நகரங்களில் வேகமாகப் பரவுகிறது. இதனால் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை மிக வேகமாக உயர்கிறது என இன்சகாக் (INSACOG) தெரிவித்துள்ளது. INSACOG என்பது கரோனா வைரஸ் குறித்தும், அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடங்களின் கூட்டமைப்பாகும்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தினமும் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கும் தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாசிடிவிட்டி ரேட், அதாவது ஒரு நாளில் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம் 20.7%-ல் இருந்து 15.5% ஆகக் குறைந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை Test Positivity Rate (TPR) எனக் கூறுகின்றனர். பொதுவாக 100 பேரில் 6 அல்லது 5 பேருக்கு கீழ் கரோனா வைரஸ் பாதிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.

கடந்த டிசம்பருக்கு முன்னதாக அன்றாட பாசிடிவிட்டி ரேட் 0.008% என்ற விகிதத்தில் இருந்தது. ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து பாசிடிவிட்டி விகிதம் ஏறிக் கொண்டே சென்றது. 5 நாட்களுக்குப் பின்னர் இன்று அன்றாட தொற்றும் குறைந்துள்ளது. அதனால் பாசிடிவிட்டி விகிதமும் குறைந்துள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதமும் 17.17% ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,55,874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 16.39% குறைவு. தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 614 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் குறைக்கப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை: தொற்று குறைவது ஆறுதலான செய்தி என்றாலும் கூட கேரளாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நேற்று மாலை நிலவரப்படி 26,514 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

எச்சரிக்கும் நிபுணர்கள்: ஒமைக்ரான் தொற்று தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்கள் மத்தியில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறப்படுகிறது. எனவே கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மத்தியில் ஒமைக்ரான் பரவினால் அது இன்னும் பலவாறு உருமாற்றம் ஆகவும் வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில் பரிசோதனைகளை அதிகப்படுத்தி, நுண் அளவில் கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்கி ஒமைக்ரான் பரவல் சங்கிலியை உடைப்பதோடு, தடுப்பூசி செலுத்துவதையும் ஊக்குவிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன? - உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறுகையில், ”உலகம் கரோனா பெருந்தொற்றின் முடிவு நிலையை எட்டிவிட்டது என்று இப்போதே கணித்து மெத்தனம் காட்டக் கூடாது. ஒமைக்ரான் தான் கடைசி உருமாறிய கரோனா வைரஸ் என்றும் இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியாது. 9 வாரங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் உலகம் முழுவதும் 80 மில்லியன் பேருக்கு பரவியுள்ளது.அதனால் இப்போதைக்கு இன்னும் சில உருமாறிய வைரஸ்கள் உருவாக பொருத்தமான சூழலே நிலவுகிறது என்பதால் எச்சரிக்கை தேவை” என்றார்.

தமிழக நிலவரம் இதுதான்: தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 31,64,205. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,98,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,20,457. சென்னையில் 6296 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தின் பாசிடிவிட்டி விகிதம் 19% என்றளவில் உள்ளது.

கரோனா எனும் பெருந்தொற்றை எப்படி சமாளிப்பது, எப்படி எதிர்கொள்வது என்பதை கடந்த 2 ஆண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. அதனால், பெருந்தொற்றிலிருந்து மீள்வதன் வழியை மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து சாத்தியப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in