

புதுடெல்லி: உயர் அலைவரிசையைக் கொண்டிருப்பதால் 5-ஜி அலைக்கற்றை சேவையை கட்டிடங்களுக்குள் வழங்குவது சவாலானதாக இருக்கும் என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் சங்கம் (டிஐபிஏ)ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிராய் தலைவர் பி.டி. வகேலா பேசும்போது, "உயர்அலை வரிசையில் வெளியாகும் 5ஜி அலைக்கற்றை கட்டிடங்களினுள் குறுகிய தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இத்தகைய சூழலில் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்களினுள் கிடைப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டிடங்களினுள் அலைக்கற்றை சேவையை கிடைக்க வைப்பது சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும். இது தொடர்பாக விரிவானஅறிக்கையை டிராய் தயாரித்துள்ளது. இதுகுறித்த பரிந்துரைகள்விரைவில் அளிக்கப்படும். டிஜிட்டல் இணைப்பு கிடைப்பதுதான் முதன்மையானது. இதற்கு அடுத்தபடியாகத்தான் வருமானம்" என்றார்.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை இணை அமைச்சர் டி. சவுகான் கூறும்போது, "டிஜிட்டல் இணைப்பு வசதியானது மக்களை மேலும் அதிகாரமிக்கவர்களாக மாற்றும். இதனால் தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவதில் அரசு முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும். 5-ஜி அறிமுகம் செய்யப்படும் முன்பு அதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும். இதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்" என்றார். - பிடிஐ