Last Updated : 25 Jan, 2022 07:21 AM

 

Published : 25 Jan 2022 07:21 AM
Last Updated : 25 Jan 2022 07:21 AM

வாகனம் வாங்க சென்றபோது ஆடையை வைத்து அவமானப்படுத்திய ஷோ ரூம் ஊழியர்: 25 நிமிடத்தில் ரூ.10 லட்சத்தை திரட்டி சவாலில் வென்ற விவசாயி

பெங்களூரு: கர்நாடகாவில் வாகனம் வாங்கச்சென்றபோது தனது ஆடையைவைத்து அவமானப்படுத்திய ஷோ ரூம் ஊழியரிடம் சவால் விட்டு வென்றுள்ளார் ஒரு விவசாயி.

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டம் ராமண‌பாளையாவைச் சேர்ந்த விவசாயி கெம்பே கவுடா (35). இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துமக்கூருவில் உள்ள மஹிந்திரா வாகன ஷோ ரூமுக்கு சென்று சரக்கு வாகனத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் கெம்பே கவுடாவை தொடர்புகொண்ட ஷோ ரூம் ஊழியர், ‘வாகனத்தை எப்போது வாங்குவீர்கள்?' என கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘கரோனா நெருக்கடியால் பணப் பற்றாக்குறை இருக்கிறது. அடுத்த மாதம் வாங்க முயற்சிக்கிறேன்' என பதிலளித்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷோரூமுக்கு சென்ற கெம்பே கவுடா, ‘‘வங்கிக் கடன் பெறுவதற்காக நீங்கள் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வந்துள்ளேன். எனக்கு இன்றே வாகனம் வேண்டும். கூடுதலாக பணம் செலவானாலும் பரவாயில்லை'' எனக் கூறியுள்ளார்.

அதற்கு ஷோ ரூம் ஊழியர், ‘‘உங்களைப் பார்த்தால் (அழுக்கான ஆடை அணிந்திருப்பதால்) 10 ரூபாய்கூட இல்லை போல தெரிகிறது. நீங்கள் வாகனம் வாங்க வரவில்லை. அதனை வேடிக்கைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்'' எனக் கூறி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கெம்பே கவுடா, ‘‘ரூ.10 லட்சம்கொண்டு வருகிறேன். இன்றே வாகனத்தை டெலிவரி செய்ய வேண்டும்'' என‌ அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு ஷோ ரூம் ஊழியர், ‘‘சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. ஷோ ரூம் மூட 25 நிமிடங்கள் மட்டுமே நேரம் இருக்கிறது. அதற்குள் ரூ.10 லட்சம் கொண்டுவந்தால் உடனடியாக வாகனத்தை தருகிறேன்'' என பதிலளித்துள்ளார். இதையடுத்து கெம்பே கவுடா அங்கிருந்தவாறு தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சத்தை திரட்டினார்.

அடுத்த 25 நிமிடங்களில் கெம்பே கவுடா ரூ.10 லட்சத்தை ஷோ ரூம் ஊழியரிடம் கொடுத்து, ‘‘நீங்கள் கூறியவாறு ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன். இப்போதே வாகனத்தை டெலிவரி செய்யுங்கள்'' என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தஷோ ரூம் ஊழியர், ‘‘வார இறுதிநாள்என்பதால் இன்று சிரமம். திங்கள்கிழமை கட்டாயம் வாகனத்தை டெலிவரி தருகிறேன்''எனக் கூறியுள்ளார்.

இதை ஏற்காத அவர், தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டித்து ஷோ ரூம் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தனது ஆடையை வைத்துஷோரூம் ஊழியர்கள் அவமானப்படுத்தியதாக புகார் அளித்தார். போலீஸார்தலையிட்டதன் பேரில் ஷோ ரூம் ஊழியர்கள் கெம்பே கவுடாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x