

திருப்பதி: வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கே. வலசை கிராமத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக திருமலைக்கு வந்து, சுவாமியை தரிசித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
இதுபோல் இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இம்முறை ஆன்லைனில் 150 சர்வ தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஆயினும், சிலர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறி சுவாமியை தரிசித்து விடலாம் எனும் நம்பிக்கையில் கடந்த 22-ம் தேதி புறப்பட்டு நேற்று திருப்பதிக்கு வந்தனர். ஆனால், அலிபிரி அருகே தரிசன டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே திருமலைக்கு அனுமதிக்க இயலும் என பாதுகாவலர்கள் கூறிவிட்டதால், செய்வதறியாது திகைத்தனர்.
இதில் சிலர் அறங்காவலர் குழு தலைவருக்கு தகவல் தெரிவித் துள்ளோம் என கூறியும் அலிபிரியில் இவர்களை விடவில்லை. சுமார் ஒரு மணி நேரம் வரை பெண்கள், ஆண்கள் என பலர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கெஞ்சி பார்த்தும் பயன் இல்லை. கடைசியாக டிக்கெட் இருந்த 150 பேர் மட்டும் திருமலைக்கு சென்றனர். மற்ற 200 பேரை தேவி காம்பளக்ஸ் அருகே வரச்சொல்லி பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை திரும்ப போக அறிவுறுத்தினர். இதனால், பல கி.மீ பாதயாத்திரை செய்தும் ஏழுமலையானை தரிசிக்க முடியவில்லையே என சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். வேறு வழியின்றி, அலிபிரி மலையடி வாரத்தில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி விட்டு வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர், கடப்பா ராஜம்பேட்டை பகுதியில் இருந்து அன்னமாச்சாரியார் நடந்து வந்த பாதை என கூறும் தடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென திருமலைக்கு பாதயாத்திரையாக வந்தனர். தகவல் அறிந்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர், அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதித்தனர்.
மேலும், 3-வது மலைவழிப் பாதை இவ்வழியாக அமைக்கப் படும் எனவும் அறிவித்தனர். கடப்பா மாவட்டம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி யின் சொந்த மாவட்டமாகும். ஆதலால் பாதயாத்திரையாக வந்த அனைவரையும் தரிசனத் திற்கு அனுமதித்தனர். ஆனால், தமிழகத்தில் இருந்து 26 ஆண்டுகளாக பாத யாத்திரையாக நடந்து வந்த 400 பேரில் 250 பேருக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறி, சுவாமி தரிசனத்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தராததால் தமிழக பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.