

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அப்னா தளம் சார்பில் ராம்பூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஹைதர் அலி கான் (36) என்பவர் சூயர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பேகம் நூர் பானுவின் பேரனான இவர், பிரிட்டனில் படித்தவர்.
இவரை காங்கிரஸ் கட்சி கடந்த 13-ம் தேதி சூயர் தொகுதி வேட்பாளராக அறிவித்தபோதிலும் அதை ஏற்க மறுத்த இவர், அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் கட்சியில் சேர்ந்தார். சூயர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ராம்பூர் எம்.பி. ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு அப்னா தளம் வேட்பாளராக ஹைதர் அலி கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் அறிவிக்கப்படும் முதல் முஸ்லிம் வேட்பாளர் இவர் ஆவார். கடந்த 2017 பேரவைத் தேர்தலில் 11 வேட்பாளர்களை அப்னா தளம் நிறுத்திய போதிலும் அதில் முஸ்லிம் சமூகத்தினர் இடம்பெறவில்லை. கடந்த தேர்தலில் 9 இடங்களில் அப்னா தளம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.