

புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரித்து கடலரிப்பு கடுமையாக ஏற்பட்டு பல நிலப்பகுதிகள் மூழ்கி வரும் சுந்தரவனக்காடுகளில் வாழும் மக்கள் தினப்படி ஊருக்குள் புகும் சீற்றமிகு கடலுடன் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு 24 பரகணா மாவட்டத்தில் மேற்கு வங்கத்தின் தெற்கு முனையில் இருக்கும் கோரமாரா தீவுப்பகுதி மெதுவே கடலில் மூழ்கி வருகிறது.
முன்பெல்லாம் மழை காலத்தில் மட்டும் ஏற்படும் கடலரிப்பு தற்போது தினசரி வாடிக்கையாகி ஒவ்வொரு மாதமும் ஏக்கர் கணக்கில் நிலப்பகுதிகளை கடலன்னை விழுங்கி வருகிறாள்.
சுந்தரவனக்காடுகள் முழுதும் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் வரலாறு காணாத அளவில் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேற நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் காலங்காலமாக எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையான இன்று தெற்கு 24 பரகாணா மாவட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கோரமாரா தீவுப்பகுதியில் சுமார் 3,000 வாக்காளர்கள் உள்ளனர். அதிகரித்து வரும் கடலரிப்பினால், கடல் நீர் நிலப்பகுதிகளுக்குள் புகுந்து ஷேக் ஜியாத் என்பவர் தனது குடிசையை வேறு வேறு இடங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் ஓரளவுக்கு நிலப்பகுதியை தன் வசம் வைத்துக் கொண்டு வெற்றிலை பயிரிட்டு வந்தார், ஆனால் தற்போது வெற்றிலை நிலங்களை கடல் நீர் மூழ்கடித்து விட்டது. கடலுக்குள் சென்று விட்டது அப்பகுதிகள்.
ஒரு காலத்தில் செல்வந்த விவசாயியாக இருந்த ராம் குமார் ரவுத் தனது வீடு எப்போது கடலுக்குள் செல்லும் என்ற அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பங்கிம் ஹஸ்ரா கடலரிப்பைத் தடுக்க பல லட்சங்கள் செலவழித்துள்ளார் என்று கூறும் ரவுத், “தன்னால் இயன்றதை அவர் செய்கிறார், ஆனால் தனி மனிதன், ஏன் மனித குலமே கூட கடலை எதிர்த்துப் போராட முடியுமா?” என்று தங்கள் விதியை சுலபமாக எடுத்துக் கொள்ளும் நிலையில் கூறினார்.
பங்கிம் ஹஸ்ரா இப்பகுதியிலிருந்து மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பும் இப்பகுதி மக்களுக்கு ஊக்கமூட்டும் வகையில், அவர், கடலரிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் கடலரிப்பைத் தடுக்கும் தனிச்சிறப்பான புற்கள் வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாகர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் மவ்சுனி என்ற மற்றொரு தீவு சுமார் 40,000 மக்கள் தொகையைக் கொண்டது. இப்பகுதியிலும் கடலரிப்பினால் இதுவரை 10,000 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறை கடல் அலை எழும்பும் போதெல்லாம் தடுப்புகளைக் கடந்து வயல்வெளிகளில் கடல் நீர் புகுந்து விளைச்சல்களை நாசம் செய்கிறது, ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது சிபிஎம்.
2050-ம் ஆண்டுக்குள்ள் 10 லட்சம் பேர்களுக்கும் அதிகமானோரை சுந்தரவனக்காடுகளிலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்த வேண்டிய மிகப்பெரிய பணி எந்த ஒரு அரசுக்கும் காத்திருக்கிறது என்று கடல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.